காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்குக் கடந்த 14ஆம் தேதி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் இரு பிரிவு இளைஞர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். ஆனால் அதற்கு இடையில் தாக்குதலில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.
அதன் அடிப்படையில், ஆயுதத்துடன் அங்கும், இங்கும் ஓடித் தாக்குதல் நடத்திய வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞரைக் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை முன்னதாக மணிகண்டன், அவரது தந்தை கணேசன் சாராயம் விற்பனை செய்வதைக் காவல் நிலையத்தில் தெரிவித்த கன்னியப்பன்-சந்தியா தம்பதியினரை அடித்து உதைக்கும் வீடியோ வெளியானது.
ஒரு பெண் என்றும் பாராமல் அந்த இளைஞர் அவரை கண்மூடித்தனமாக அடித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ந்து மணிகண்டன் மீது புகார் வந்த வண்ணம் இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா மணிகண்டனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமாருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: மாவட்ட ஆட்சியர் அறைக்கு பக்கத்து அறை மூடல்