காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் இடைத்தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து பாமக அன்புமணி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், 'வாக்குப்பதிவு செய்யும்போது வாக்குசாவடியில் பாமகவினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்கள் மட்டுமே இருப்போம். என்ன செய்யவேண்டும் என அனைவருக்கும் தெரியும்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அன்புமணியின் இந்த சர்ச்சை கருத்தையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுகவினர் திருப்போரூர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்போரூர் இடைத்தேர்தல் அலுவலர் ராஜுவிடம் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அன்புமணி மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் 171சி மற்றும் 171எஃப் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.