தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்தரமேரூர் அருகே அரியவகை கல் செக்கு கண்டெடுப்பு - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: விண்ணமங்கலம் கிராமத்தில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த அரியவகை கல் செக்கு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உத்தரமேரூர் அருகே அரியவகை செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு
உத்தரமேரூர் அருகே அரியவகை செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு

By

Published : Apr 16, 2021, 6:37 PM IST

Updated : Apr 17, 2021, 7:27 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்செக்கு ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:

விளக்குகளாக பயன்படுத்தப்பட்ட கல் செக்குகள்

”உத்தரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மண் மேடு ஒன்றில் முட்புதரில் புதைந்த நிலையில் கல் செக்கு ஒன்று இருப்பதைக் கண்டறிந்தோம். மூன்று வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன. பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்கள் மக்கள் வாழ்வில் பெரும் இடம் பிடித்திருந்தது. சமையல் பயன்பாட்டிற்கும் மருத்துவத்துக்கும் கல் செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டிற்கும், கிராமப் பகுதிகளில் விளக்குகள் இல்லாத இடங்களில் தெருவிளக்குகளாகவும் கல் செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டித் தந்துள்ளன.

உத்தரமேரூர் அருகே கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை கல் செக்கு

தானமாக வழங்கப்பட்ட கல் செக்கு

மன்னர் எவரோ அல்லது பெருஞ்செல்வந்தரோ தனது குடும்பத்தார் உடல் நலம் பெற வேண்டி ஆலயத்திற்கோ அல்லது ஊருக்காகவோ இந்த கல் செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறு தானம் வழங்கப்பட்ட செக்கில் எந்த ஆண்டு, யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி இச்செக்கில் மூன்று வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சிக்காலத்தில் கலைவாணிகன் என்பவர் இந்த கல் செக்கு உரலை ஊருக்கு தானம் அளித்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது.

விஜயநகர காலத்தைச் சேர்ந்தது

இது சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த அரியவகை கல் செக்காகும். இக்கல் செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரமேரூர் வட்டாரத்தில் உள்ள ஒரே செக்கு கல் செக்கு இது என்பதும் கூடுதல் சிறப்பாகும். 1923ஆம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மண் மேட்டில் முட்புதரில் புதைந்த நிலையில் உள்ள இதன் ஒரு சிறு பகுதி மட்டுமே தற்போது வெளியில் தென்படுகிறது. இயற்கை சீற்றங்களால் இது விரைவில் முழுமையாக புதைந்துபோய் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. எனவே வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்களிசைக் கலைஞர் திருவுடையான் மகள் மரணம்: நெஞ்சை உருக்கும் கடிதம்

Last Updated : Apr 17, 2021, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details