காஞ்சிபுரம் பெருநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில், ரயில்வே சாலையில் இயங்கி வந்த ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும், ஓரிக்கை பேருந்து நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டு நாளை (மே 20) முதல் செயல்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு கரோனா காலங்களில் காய்கறி வியாபாரிகளுக்கு நகராட்சியால் கடை ஒதுக்கீடு செய்த அடையாள அட்டையின்படியே தற்போதும் பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சில்லறை வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதனால், பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள சில்லறை வியாபாரிகளிடமே காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.