காஞ்சிபுரம்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை "பாரத் ஜோதா யாத்ரா" என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். மத்திய பாஜக அரசின் தவறான செயல்பாடுகள், கொள்கைகள் காரணமாக பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி மேலிடமும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல்காந்தி 3570 கி.மீ., தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் 150 நாள்களுக்கு பாதயாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையின் தொடக்க விழா இன்று (செப் 07) மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது.
இந்நிலையில், இப்பாதயாத்திரை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இன்று காலை சென்னையிலிருந்து சாலை மார்கமாக காரில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்தடைந்த ராகுல் காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.