காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியிலிருந்து வாலாஜாபாத் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யும் பணியின் போது 20 கிலோமீட்டர் தொலைவிற்கு இடையூறாக இருந்த மின் கம்பங்கள், மரங்கள் என அனைத்தும் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
இதனிடையே சிறுமாங்காடு பகுதியில் மட்டும் சாலையிலிருந்த இரண்டு மின் கம்பங்களை நெடுஞ்சாலைத் துறை, மின்சார துறை அலுவலர்கள் அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று (பிப். 23) இரவு குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (58) என்பவர் பணி முடிந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையிலிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.