காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவினை தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் தீவிரமாக செயல்படுத்தி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகரை ஒட்டி உள்ள பொன்னேரி ஏரியின் நீர்நிலை கரைப்பகுதிகளில் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள 82 வீடுகளை அகற்றும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களை வழிமறித்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் அகற்றும் பணிக்கு எதிர்ப்புத்தெரிவித்து சாலையில் அமர்ந்து கூச்சலிட்டும்,ஒப்பாரி வைத்தும், தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம் எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.