காஞ்சிபுரம்: ஸ்ரீ பெரும்புதூரில் செயல்படும் ஃபாக்ஸ்கான் என்ற தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்துவருகின்றனர்,
இவர்கள் சென்னை அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
தரமற்ற உணவு
இந்நிலையில் கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயாரித்ததால் விடுதியில் தங்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.
தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் சாலை மறியல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
பெரும்பாலானோர் இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக உணவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
எட்டு பெண்களின் நிலை?
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு பெண்களின் நிலை சம்பந்தமாக விடுதி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமலிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களோ என்று சந்தேகம் எழுந்ததையடுத்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், விடுதியிலிருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் சுமார் 11 மணியளவில் தொடங்கிய இப்போராட்டம் தற்போது எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவே காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.
ஆகையால் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி நேரில் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நள்ளிரவு முதல் போக்குவரத்து முடங்கியதையடுத்து தற்போது காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி நெடுஞ்சாலையின் ஓரமாக ஒவ்வொரு வாகனங்களாகச் செல்லும் வகையில் போக்குவரத்தைச் சீர்செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து