காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் பணியாற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 11ஆம் தேதி வெங்காடு பகுதியிலிருந்து வீட்டிற்குச் சென்ற இளம்பெண் ஒருவரை மறித்த இரு இளைஞர்கள், தங்களை காவலர்கள் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் போலீஸ் என நம்பி இளம் பெண் அவர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் ஸ்ரீபெரும்புதூரை கடந்து செல்லவே இளம் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்த இரண்டு நபர்களும் இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பெண்ணை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல் துறை கட்டுபாட்டில் உள்ள காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை சேகரித்து இளைஞர்களைத் தேடி வந்தனர்.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க பிடிக்க காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (31), திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நாகு (எ) நாகராஜ் (31) எனத் தெரியவந்த நேரத்தில் அவர்களைக் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில் குற்றவாளிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை மீட்கச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியை குற்றவாளி நாகராஜ் எடுத்து போலீஸை பார்த்து சுட முயன்றதால், போலீசார் திருப்பி குற்றவாளி நாகராஜ் காலில் சுட்டு பிடித்ததாகவும், உடன் இருந்த பிரகாஷ் தப்பிக்க முடிந்தபோது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தகவல் தெரிவித்தனர்.
இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம்