காஞ்சிபுரம்:ஏகனாம்பேட்டை பகுதியில் வசிப்பவர், குமார். இவரிடம் நேற்று கையில் பட்டாகத்தியுடன் வந்த கஞ்சா போதை வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் அருகில் இருந்த கலைவாணி என்பவர் வீட்டில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன கலைவாணி, தனது குழந்தைகளுடன் வெளியில் வந்து வீட்டை பூட்டிவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் வீட்டின் உள்ளே சிக்கிக் கொண்ட வாலிபர் கோபத்தில் வீட்டை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்ற போது அந்த நபர் கஞ்சா மயக்கத்தில் கிடந்துள்ளார். பின்னர் போதையில் இருந்த அந்த வாலிபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையில், அஜித் வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டபோது கடும் கஞ்சா போதையில் இருந்த அஜித் தனது நண்பர்களான இளையராஜா மற்றும் தினேஷ் ஆகியோர், சீனிவாசன் என்பவரைக் கொலை செய்து ஊத்துக்காடு ஏரியில் புதைத்துள்ளதாக உளறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வெண்குடியைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது நண்பர் தினேஷ் ஆகியோரை சுற்றி வளைத்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதில் கொலை செய்யப்பட்ட சீனிவாசனும், இளையராஜா, தினேஷ் ஆகியோரும் நண்பர்கள் என்பதும், இவர்கள் மூவரும் சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர் என்றும் தெரியவந்தது.