காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது.
முதலமைச்சருக்கும், ஆளுநருக்கு பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த நான்கைந்து ஆண்டுகளில் , எங்களுக்குத் தெரிந்து 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம். இந்த 15 மாதத்தில் மட்டும் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமானது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி, தமிழ்நாடு அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பாமக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்கள் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது, எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம்.ஆனால், அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை” என்றார்.