காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 80வது பிறந்த நாள், முத்து விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநில பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார்.
அப்போது பேசிய அவர், ’108 அவசர உதவி ஆம்புலன்சை அமல்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி, அதுமட்டுமல்லாமல் 107 இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததும் இக்கட்சி. மதுவை ஒழிப்பதற்காக அதிக அளவில் போராட்டங்களை நடத்தி உள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்றார்.
அதன் பிறகு பேசிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எதிரொலி மணி, தாழ்த்தப்பட்ட இனத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை சுடுகாடு வரையும் எடுத்துச் சென்று அடக்கம் செய்ததற்கு சமூக நீதி என்ற பட்டத்தை ராமதாஸூக்கு கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவில் மருத்துவம் பார்த்து தற்போது இலவசமாக மருத்துவமனையில் மருத்துவம் வழங்கும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ் என்று புகழாரம் சூட்டினார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.