காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதர் சிலையானது, அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு தரிசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய தரிசனமானது, ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அத்திவரதரை 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்பதால், தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என பெரம்பூரைச் சேர்ந்த தென்னிந்திய இந்து மகா சபை தலைவர் வசந்தகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்! - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய இந்து மகா சபை தலைவர் மனு தாக்கல் செய்தார்.
அத்திவரதர் சிலை முதன்முதலில், 1703ஆம் ஆண்டு கோவில் நிர்வாகிகள் அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்திய போது கண்டெடுக்கப்பட்டது. பின் 1937ஆம் ஆண்டு அச்சிலை மீண்டும் எடுக்கப்பட்டு 40 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்யப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால், தரிசன நாட்கள் 40இல் இருந்து 48 ஆக நீட்டிக்கப்பட்டது.
மேலும், ஐந்து லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எனவே, எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத காரணத்தினால் தரிசன நாட்களை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வசந்தகுமாரின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.