காஞ்சிபுரம்: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.
இதில் ஏகனாபுரம் கிராமத்தை சுற்றி மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளது. இதனால் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தினந்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அமைதியான முறையில் இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 63வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் தங்களது கைக்குழந்தைகள்,குடும்பத்தாருடன் பெண்கள், முதியவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.