சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராம பகுதிகளில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் விளக்கம் அளித்துள்ள நிலையில், விமான நிலையம் தங்கள் கிராமப் பகுதியில் அமைவதற்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்பதற்காக பல சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கிராமத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களுடைய போராட்டத்தை தீவர படுத்தியுள்ளதால் , கிராம சுற்றுவட்டார பகுதிகளில் புற காவல் நிலையத்தை காவல்துறையினர் நிறுவியுள்ளனர். ஏகனாபுரம், கண்ணதாங்கள், உள்ளிட்ட பகுதிகளில் புற காவல் நிலையம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம மக்களை சந்திக்க வந்த விவசாய சங்கத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து இன்று எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இக்கிராம பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்க வந்திருந்தனர். அப்பொழுது காவல்துறையினர் கண்ணதாங்கள் என்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு கட்சியின் மாநில செயலாளர் கரீம், வர்த்தக அணி தலைவர் அன்சாரி மற்றும் மாவட்ட மாவட்ட நிர்வாகி ஜாஃபர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி.ஜூலியஸ் சீசர் மற்றும் திரளான காவல்துறையினர் கைது செய்து அவர்களை சுங்குவார்ச்சத்திரம் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.