வேலூர் மாவட்டத்தில் இருந்து வரும் பாலாறு காஞ்சிபுரம் மாவட்டம் வழியாகப் பாய்ந்து கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து செல்வதுடன் அங்கு ஏராளமான ஏரிகள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி 18.60 அடி ஆழம் கொள்ளளவு கொண்டதில் தற்போது 15 அடி ஆழம்வரை மட்டுமே நீர் நிரம்பி முழு கொள்ளளவை எட்டாமல் உள்ளது. பொன்னை அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள பாலாற்று வெள்ள நீரால் தாமல் ஏரி முழுவதுமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாலாற்றில் வரும் வெள்ள நீர் ஓச்சேரி அருகே சமூக விரோதிகளால் தடுத்து நிறுத்தி வேறு பாதையில் திருப்பிவிடப்படுவதால் பாலாற்றில் தண்ணீர் வராமல் தாமல் ஏரி நிரம்பவில்லை. இது குறித்து பொது பணித்துறையிடமும் காவல் துறையினரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் இதனால் ஆத்திரமடைந்த தாமல் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் கிராம மக்களும் ஓச்சேரி பாலாற்றில் இருந்து தாமல் ஏரிக்கு தண்ணீரைத் திறந்துவிட கோரி காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பொன்னியம்மன்பட்டறை சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.