காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 163 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று முன்தினம் (மே 4) ஒரே நாளில் 594 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசு, தனியார் மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு 3 ஆயிரத்து 025 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய 353 படுக்கைகளில், 340 பேர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு; கரோனா நோயாளிகள் அவதி!
காஞ்சிபுரம் : அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாட்டால் கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டரை ஒரு முறை நிரப்பினால், மூன்று நாட்கள் வரையில் நீடித்தது. தற்போது தினமும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டரின் பயன்பாடு தேவைப்படுகிறது. தற்போது தேவை அதிகரிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்றுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தட்டுப்பாட்டால் வாரத்திற்கு ஒரு முறை தேவைப்படும் அளவைக் காட்டிலும் மிக மிக குறைவாகவே நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மருத்துவர்கள், செவிலியர்களிடத்தில் பொது மக்கள் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
எனவே ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனா அச்சம்: பெற்ற தாயை அறையில் அடைத்த மகன்!