காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மகாபெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மணி மண்டபம் அமைந்துள்ளது. இதில் மகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் அறக்கட்டளை மற்றும் பக்தர்களின் நன்கொடைகளால் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட தெப்பக்குளம் ஒன்று புதியதாக அமைக்கப்பட்டது.
130 அடி நீளமும் 130 அடி அகலமும் 21 அடி ஆழமும் கொண்டதாகவும்,28 படிகளுடன், எட்டு பட்டை வடிவில் அஷ்டாங்க வடிவத்தில் இந்த தெப்பக்குளத்தை அமைந்துள்ளனர். மேலும் குளத்தின் நடுவில் யாளி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. நாட்டை ஆண்ட மன்னர்கள் குளங்களை வெட்டி நீர் ஆதாரத்தை பெருக்கினார்கள்.
அதே போல நீர் ஆதாரத்தை பெருக்கவும், பக்தர்கள் நீராடும் வகையிலும், ஜீவராசிகள் நீர் அருந்தவும் பயன்படும் வகையில் இக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
தெப்பக்குளத்தை திறந்துவைத்த காஞ்சி மகா பெரியவர் இந்நிலையில் இன்று இத்தெப்பக்குளத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதையொட்டி காஞ்சி பீடாதிபதி இக்குளத்தில் மலர்களை தூவி யாகசாலை பூஜைகளில் பூஜிக்கப்பட்ட புனித நீர்க் குடங்களிலிருந்த புனித நீரை ஊற்றி இக்குளத்தினை பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
முன்னதாக திருக்குளம் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. இக்குளத்தின் நடுவில் உள்ள யாழி மண்டபத்தில் மகாபெரியவர் சிலை வைக்கப்பட்டு தெப்பத்திருவிழாவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மணிமண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மகாபெரியவரின் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.