காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பலவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர், பிரபா என்கிற பிரபாகரன். தேமுதிக பிரமுகரான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், பிரபாகரன் நேற்று (டிச.26) அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல் பிரபா மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்தியது.
இதில் அச்சமடைந்து ஓடிய பிரபாவை ஓட ஓட விரட்டிச் சென்று, புற காவல் நிலையம் அருகே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விஷ்ணு காஞ்சி போலீசார், தனிப்படைகள் அமைத்து ரவுடியை கொலை செய்த கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச.27) காலை காஞ்சிபுரம் இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார், பிரபா கொலை வழக்கில் தொடர்புடைய தேமுதிக பிரமுகர் சரவணன் தம்பி ரகு என்கிற ரகுவரன் மற்றும் கருப்பு பாஷா என்கிற ஹசைன் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் மூலம் சிவகாஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தற்காப்பிற்காக போலீசார் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து என்கவுண்டர் நடந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவர்களை நலம் விசாரித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறுகையில், “காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மர்ம கும்பல் ஒரு ரவுடியை வெட்டி கொலை செய்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரவுடியைக் கொலை செய்த கும்பலை தீவிரமாக கண்காணித்து தேடி வந்தோம்.
மேலும், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதால், கொலையாளிகளால் காஞ்சிபுரத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில், அந்த கும்பல் இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான தனிப்படையினர், சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.