காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரான இந்திராணி என்ற மூதாட்டியிடம், அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை வடமாநில வழிப்பறி கொள்ளையர்கள் நேற்று முன்தினம் (அக்டோபர் 10) பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதையடுத்து அந்த மூதாட்டி கூச்சலிட்டதன்பேரில் அருகிலிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களைப் பிடிக்க முற்பட்டனர். அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டு தப்பிச்சென்று, இருங்காட்டுக்கோட்டை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் தலைமறைவாகப் பதுங்கியிருந்தனர். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டை
தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் சரக காவல் துறைத் தலைவர் சத்யபிரியா தலைமையில், அன்றைய தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள், சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக கொள்ளையர்கள் பதுங்கியிருந்த காட்டுப்பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக ஐந்து ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தினர். மேலும் காட்டுப் பகுதியிலுள்ள அனைத்து வழிகளிலும் 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று (அக்டோபர் 11) காலை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
என்கவுன்ட்டர்
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 11) பிற்பகலில் மேவலூர்குப்பம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் உலவுதாக வந்த தகவலின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது நஹீம் அக்தர் என்ற வட மாநில வழிப்பறி கொள்ளையனை லாவகமாகக் கைதுசெய்தனர். அதே இடத்தில் மற்றொரு கொள்ளையரான முர்த்து ஜா ஷேக் என்பவரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் காவலர் ஒருவரைத் தாக்கியுள்ளார்.
என்கவுன்ட்டர் குறித்து காவலர் விளக்கம் இதனால் தற்காப்பு நடவடிக்கையாக காவல் துறையினர் அவரை என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கொள்ளையனின் உடல் உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் பிடிபட்ட குற்றவாளியிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு, அவரிடமிருந்து தங்க நகை, துப்பாக்கி, தோட்டா, கத்தி, இரும்பு ராடு போன்ற பயங்கர ஆயுதங்கள், அவர்கள் வைத்திருந்த பல வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள், ஆதார், பான் கார்டுகளைப் பறிமுதல்செய்தனர்.
விளக்கம்
இதனைத் தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக காவல் தலைவர் சத்தியபிரியா ஆகிய இருவரும் செய்தியாளரைச் சந்தித்துக் கூறினர்கள்.
அதில் காஞ்சிபுரம் சரக காவல் துறைத் தலைவர் கூறுகையில், “கடந்த பத்தாம் தேதி காலையில் இந்திராணி என்ற பெண்ணிடம் இரண்டு நபர்கள் தாலி சங்கிலியைப் பறித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த இருவரைத் துரத்திச் சென்றபோது துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர்.
கொள்ளையடித்த தகவலைக் கேட்டவுடன் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதியை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.
மேலும் மூன்று ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குற்றவாளிகள் இருவரும் இருப்பது தெரியவந்தது. அதில் நஹீம் அக்தர் என்பவரை லாவகமாகக் கைதுசெய்து விசாரணை செய்ததில், அதே இடத்தில் இன்னொரு குற்றவாளியும் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த சிறப்பு அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று குற்றவாளியைக் கைதுசெய்ய முயற்சி செய்தனர். அப்பொழுது காவல் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தபோது அந்த நபர் காவல் துறையினரைத் தாக்க முயற்சி செய்தார். அதில் ஒருவர் காயமடைந்தார்.
தலைமைக் காவலரை குற்றவாளி வெட்டிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது வேறு வழியில்லாமல் காவல் துறையினர் தங்களுடைய துப்பாக்கியை வைத்து இரண்டு ரவுண்டு சுட்டனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில கொள்ளையன் முர்த்து ஜா ஷேக் என்பவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.
தொடர் விசாரணை
இதையடுத்து வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சந்தோஷ்குமார் கூறுகையில், “இதேபோன்று இதே பகுதியில் சமீப காலங்களில் வழிப்பறி போன்ற இரண்டு குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அது குறித்து வழக்கு தற்போது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ளது. ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக இவர்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் தற்போது விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளோம்.
இவர்கள் நீண்ட நாள்களாகத் துப்பாக்கியைக் கையில் வைத்திருந்தாலும், சில இடங்களில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மிரட்டியுள்ளனர். மேலும் காவல் துறையினர் சுட்டுக்கொன்றபோது அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், ஒரு துப்பாக்கி, கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்செய்ப்பட்டன. தொடர் விசாரணைக்குப் பிறகே அனைத்துத் தகவல்களும் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜவுளிக் கடைக்குள் கடை ஊழியரைத் தாக்கிய பெண் - போலீஸ் விசாரணை