காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் 2022 ஏப்ரல் 30 வரை காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. வருகின்ற ஜூலை 9 அன்று அதற்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஜூன் 20இல் இருந்து வேட்பு மனுதாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 9இல் வாக்குப்பதிவும், ஜூலை 12இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தபோது 36ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, மற்ற 50 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டுக்கு வேட்பு மனு தாக்கல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. திமுக சார்பில் 36ஆவது வார்டு பகுதியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப்பு என்கிற சுப்புராயன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல கடந்த நகர்மன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் கண்ணிவேலும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இப்படி முக்கிய கட்சிகள் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் உயிரிழந்துள்ளார்.
இந்த காரணத்தால் நிறுத்தப்பட்ட தேர்தலில் அதிமுகவின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தற்போது நிறுத்த முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிமுகவைச் சேர்ந்த ஜானகி ராமனின் தந்தை வேணுகோபால் என்பவர் நேற்று சுயேச்சையாகத் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனு தாக்கலின்போது அதிமுகவைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகளோ, மாநகர நிர்வாகிகளோ யாரும் உடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னையால், நகர்ப்புறத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சி அங்கீகார கடிதத்தில் யார் கையெழுத்து இடுவது என்கிற சிக்கலும் உருவாகியுள்ளது. குறிப்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு கடிதம் வழங்கினால், அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எதிர்த்து சட்டரீதியாக ரத்து செய்ய வாய்ப்புள்ளது. அதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கையெழுத்திட்டால் அதை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்க வாய்ப்புள்ளது.
சின்னம் கிடைக்காமல் காஞ்சி மாநகர உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச்சேர்ந்தவர் சுயேச்சையாக போட்டி! எனவே, தற்போதுள்ள சூழலில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் இணைந்து கையெழுத்திட்ட வாய்ப்பில்லாததாலும்,வேறு யாருக்கும் இதில் அதிகாரம் இருக்கிறது என்பது குறித்த சட்டரீதியான உத்தரவாதமும் இல்லாததாலும் நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலையில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமான வேட்பாளரைக் களம் நிறுத்த முடியாத நிலையே தான் உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் தனது அதிகாரப்பூர்வமான வேட்பாளரை அதிமுக களமிறக்க முடியாதது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், மற்ற கட்சியினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் சம்பவம் : ஓபிஎஸ் ஆதரவாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு