முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ராஜிவ் காந்தி நினைவகத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து நினைவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எல்.ஐ.சியின் மருத்துவக் காப்பீடு, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்டப் பொருட்களை அவர் வழங்கினார். இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரை தலைவர் பிரகாசம், ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "உலகத் தலைவர்களிடையே சிறந்த மனிதராக ராஜிவ் காந்தி காட்சியளித்தார். மக்களுக்காக நாட்டிற்காக அவர் தனது உயிரையே இழக்க நேர்ந்தது. இன்றைக்கு ராஜிவ் காந்தியை இழந்து இந்தியா வாடுகிறது. ராஜிவ் காந்தியின் நோக்கங்கள், இலட்சியங்கள், செயல்பாடுகள் ஆகியவை காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும். தடைகளைத் தகர்த்து எரிந்து வெற்றியின் சிகரத்தை நாங்கள் அடைவோம்" என்றார்.