செங்கல்பட்டு: மாமல்லபுரம், அடுத்த வடகடம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிற்பி புண்ணியக்கோட்டி (44), கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிற்பக் கலை கல்லூரியில் கல் சிற்பக் கலை பயின்றவர். இவர் மாமல்லபுரத்தில் சிலை வடிக்கும் சிற்பக்கூடம் வைத்துள்ளார். இங்கு, செதுக்கப்படும் கற்சிற்பங்களை ஒத்தவாடை தெருவில் உள்ள கடைக்கு கொண்டுவந்து விற்பனை செய்துவருகிறார்.
இவர், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற சிற்பக்கலை கண்காட்சியில் சிறந்த சிற்பக் கலைஞர் என விருதுபெற்றவர். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அறிவித்த (central merit award) விருதுக்காக கை உளியால் செதுக்கப்பட்ட பச்சைக் கல்லில் அர்த்தநாரீஸ்வரர் சிலையை வடித்து, மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் புண்ணியக்கோட்டி அனுப்பிய சிலையைத் தேர்வுசெய்து, இவருக்கு central merit award என்ற விருதையும், சான்றிதழையும் வழங்கி கெளரவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் புண்ணியக்கோட்டி பேட்டி இதனையறிந்த, வடகடம்பாடி கிராமத்தினரும், சக சிற்பிகளும் புண்ணியக்கோட்டிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். விரைவில் அவருக்குச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதை அறிந்த புண்ணியக்கோட்டி, கரோனா பெருந்தொற்று காலத்தில் சிற்பக் கலைஞர்கள் பெரிதும் அவதிப்பட்டுவருவதாகவும், அதற்காகத் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் குறைந்த அளவில் ஊக்கத் தொகையாக ஏதாவது வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.