தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணத்திற்காக சிறைப்பிடித்து பிச்சை எடுக்கவைத்த 2 குழந்தைகளை மீட்ட போலீஸ்! - Narikuravar childrens

காஞ்சிபுரம்: நரிக்குறவ தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளை வீட்டில் சிறைப்பிடித்து வைத்திருந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவரிடமிருந்து சிறுமிகளை மீட்ட காவல் துறையினர், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நரிக்குறவ தம்பதி
நரிக்குறவ தம்பதி

By

Published : Feb 2, 2021, 11:56 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் வசித்துவரும் துர்கப்பா (30), புஷ்பா (25) நரிக்குறவ தம்பதிக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு துர்கப்பா, வடிவேல் உள்ளிட்ட 5 பேர் ட்ரை சைக்கிளில் வியாபாரம் காரணமாகச் சென்றுள்ளனர். அப்பொழுது ட்ரை சைக்கிள் விபத்துக்குள்ளானபோது வடிவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பணத்திற்காக சிறைப்பிடித்து பிச்சை எடுக்கவைத்த 2 குழந்தைகளை மீட்ட போலீஸ்
தனக்கு காயம் ஏற்பட்டதற்கு காரணம் நீதான் எனத் துர்கப்பாவை குற்றம்சாட்டி மருத்துவச் செலவிற்கு ரூபாய் 2 லட்சம் கொடுக்க வேண்டும் என வடிவேல் கேட்டுள்ளார். பணம் கொடுக்க முடியாததால் துர்கப்பாவின் 9 வயது மகள் துர்கா, 6 வயது மகள் தீபிகா இரு பெண் குழந்தைகளையும் வடிவேல் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தைகளைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்துவிட்டு அழைத்துச் செலுங்கள் எனக் கூறி கடந்த ஒரு வருடமாக வடிவேல் துர்கப்பாவின் இரு பெண் குழந்தைகளையும் வடிவேலுவின் நாவலூரில் உள்ள வீட்டில் சிறைப்பிடித்து வைத்துள்ளார்.
துர்கப்பாவின் இரு பெண் குழந்தைகளையும் வடிவேல் ஓஎம்ஆர் சாலையில் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்வம் குறித்து பாதிக்கப்பட்ட நரிக்குறவ தம்பதியினர் சென்னை பனையூரில் உள்ள ஏர்ரம்மாள் அறக்கட்டளை உரிமையாளரிடம் உதவி நாடியபோது அறக்கட்டளையைச் சேர்ந்த சேகர், சமூக ஆர்வலர் மோனீஷ்வரன் இருவரும் குழந்தைகளை மீட்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் ராமசந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர்.
ராமச்சந்திரன் ஆலோசனையின்படி தாழம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார், நாவலூரில் நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபோது வடிவேல் வீட்டில் துர்கப்பாவின் இரு மகள்கள் இருந்ததை உறுதிசெய்தனர்.
பின்னர் அங்கு நடத்திய விசாரணையில், துர்கப்பாவின் இரு பெண் குழந்தைகளும் கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிறைப்பிடித்து வைத்திருந்ததும், இரு பெண் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.
வடிவேல் வீட்டில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இரு பெண் குழந்தைகளையும் மீட்ட உதவி ஆய்வாளர் உதயகுமார் தாழம்பூர் காவல் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.


நேற்று (பிப். 01) மாலை 3 மணியளவில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ஏடிஜிபி சீமா அகர்வால், சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் ஐஏஎஸ் லால் வீனா தலைமையில் காணமல்போன குழந்தைகளை மீட்டெடுப்பதற்காக ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற தலைப்பில் ஒரு குழு அமைத்துள்ளனர்.

குழு அமைத்த இரண்டு மணி நேரத்தில் பெற்றோரை விட்டு பிரிந்து சென்ற இரு பெண் குழந்தைகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் 11 ஆண்டுகளில் காணாமல்போன 8,112 குழந்தைகளில் 7,994 பேர் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details