காஞ்சிபுரம் மாவட்டம், சாலபோகம் பகுதியைச் சேர்ந்தவர் சால்டின் சாமுவேல் (42). நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இவர், அக்கட்சியின் காஞ்சிபுரம் வேட்பாளர் எனக் கூறப்படுகிறது. சாமுவேல் நேற்று (பிப்.23) நெல்லுகார வீதியில் இயங்கி வரும் பிரபல பெட்ரோல் பங்கிற்குச் சென்று தனது காருக்கு பெட்ரோல் நிரப்புமாறு ஊழியரிடம் கூறியுள்ளார்.
ஊழியரிடம் வாக்குவாதம்
இதையடுத்து, ஊழியர் அவரது காருக்கு பெட்ரோல் நிரப்பியப்போது 45 லிட்டர் கொள்ளவு கொண்ட அக்காரில் 48 லிட்டரையும் தாண்டி பெட்ரோல் பங்க் மீட்டரில் காட்டியதைக் கண்டு சாமுவேல் அதிர்ச்சியடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர் தான் காரை ஓட்டி வந்தபோது சுமார் 2 லிட்டர் பெட்ரோல் இருந்ததாகவும், ஆனால் தாங்கள் 48 லிட்டரை தாண்டி பெட்ரோல் நிரப்பியும் ஏன் எனது காரின் பெட்ரோல் டேங்க் இன்னும் நிரம்பவில்லை, என்ன மோசடி இங்கு நடக்கிறது எனக் கூறி ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விசாரணை
இதைக் கண்ட சக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, சாமுவேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து, சுமார் 50மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பெட்ரோல் பங்கில் குவிந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர் முன்னிலையில் மேலும் 1லிட்டர் பெட்ரோல் நிரப்பியும் பெட்ரோல் டேங்கானது நிரம்பவில்லை.
பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் இதனால், பெட்ரோல் பங்க்கில் மோசடி நடைபெறுவதாக கூறி பங்க்கை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து, காருக்கு 5 ஆயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் மோதலில் ஈடுபட்டதாக சாமுவேல் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சாய் என்பவர் புகார் அளித்தார்.
அதேபோல், பெட்ரோல் பங்கில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாமுவேல் புகார் அளித்துள்ளார். இருதரப்பினரிடமிருந்தும் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான்