காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை சதாவரம் பகுதியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் இசையில் ஆர்வமிக்க12 வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவர்களுக்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், மிருதங்கம், வயலின் போன்ற கலைப் பிரிவுகளில் மூன்றாண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
மேலும், இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை, இலவச விடுதி வசதி உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகளும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், வருகின்ற ஜூன் 21ஆம் தேதியன்று உலக இசை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, கலை பண்பாட்டுத் துறை சார்பில் இப்பள்ளியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழிசை, கிராமியப்பாடல், முதன்மை கருவியிசை (வயலின், வீணை, நாதஸ்வரம்), தாள கருவியிசை ( மிருதங்கம், தவில், கடம்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இசைப் போட்டிகள் இன்று நடைபெற்றன.
இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு நடுவர்கள் முன்னிலையில் தங்களது இசை திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் தமிழில் அமைந்த பாடல்களை மட்டுமே பாடியும், இசைத்தும் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை இசைப்பள்ளியில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.