காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பஞ்சுப்பேட்டை, செவிலிமேடு, பிள்ளையார் பாளையம், சின்னக் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு அரசமரத்துத் தெருவைச் சேர்ந்தவர் உதயராஜ்(26). இவர் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ராஜேஸ்வரி(21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்ததால் சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து பரிசோதனை செய்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ராஜேஸ்வரிக்கு கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, கர்ப்பிணியான ராஜேஸ்வரி தொடர் சிகிச்சைப் பெற்று வந்த சின்னக் காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதால், மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், செவிலியர்களே ராஜேஸ்வரிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தின் போது குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தையை முழுதும் வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் எந்த முயற்சியும் பலன் அளிக்காததால், ராஜேஸ்வரியின் உறவினர்களுக்கு தெரிவிக்காமலே அவருக்கு சிசேரியன் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ராஜேஸ்வரிக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திங்கள் கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்ப சுகாதார மையத்துக்கு வந்த மருத்துவர், ராஜேஸ்வரியின் நிலையைப் பார்த்துவிட்டு உடனே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் 3 கிலோ 700 கிராம் எடையுள்ள பெண் குழந்தை வயிற்றில் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. எனவே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.