காஞ்சிபுரம்: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் பகுதியில் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். கோவையில் நடைபெற்றக் கூட்டத்தில் மோடி தான் ஓர் பிரதமர் என்பதை மறந்துவிட்டு திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.
ஆரியத்தை புகுத்த முயற்சி
பாஜகவினர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்திய வன்முறைகளை நான் சொன்னால், அதற்கு ஒரு நாள் போதாது. எடப்பாடி பழனிசாமி உத்தமர், பன்னீர்செல்வம் புனிதர் என்று மோடி சொல்லிக்கொள்ளட்டும். எனக்கு, அதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் மனதில் பிரதமர் தனது மதிப்பை இழப்பார். அரசியல் ரீதியாக திமுகவை மோடி விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் ஆரியத்தை புகுத்த முயற்சித்துவருகிறார். நாங்கள் திராவிடத்தால் அவற்றை தடுத்துவருகிறோம்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் போல பேசத்தொடங்கிய மோடி; ஸ்டாலின் காட்டம் பாஜகவின் பலம் என்ன?
பிரதமர் பதவியில் இருந்துகொண்டு திமுகவை தரம் தாழ்த்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. அண்மைக்காலமாக புதுச்சேரி, தமிழ்நாட்டில் குற்றப்பிண்ணனி உள்ளவர்கள் பாஜகவில் இணைகின்றனர். இதை, பாஜக வரவேற்கிற நிலையில் திமுகவை குறை சொல்வதற்கு மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழ்நாட்டில் திமுக பலம் இழந்துவிட்டதாக மோடி பேசியிருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி பிரதமருக்கு மறந்துவிட்டதா? மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் 1.1 விழுக்காடு மட்டுமே வாக்கு வித்தியாசம் இருந்தது. பாஜகவின் பலம் என்ன என்பதை மோடி முதலில் பார்க்கட்டும், மற்ற எல்லா தேர்தல்களிலும் தோல்வியைச் சந்தித்த கட்சிதான் பாஜக.
ஓபிஎஸ், ஈபிஎஸ் போல மோடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் ஒருவர்கூட இல்லை. கடந்த காலங்களில், அதிமுக, திமுக கூட்டணியில் பாஜக இருந்ததால் மக்களவை உறுப்பினர்களை பாஜக பெற்றது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போல மோடி பேசத் தொடங்கிவிட்டார்.
விரைவில், திமுக ஆட்சி மலரும், மக்களின் கவலைகள் யாவும் தீரும்" என்றார். இந்தப் பரப்புரையின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்பி, திமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:மிசா முதல் திமுக தலைவர் வரை...!