காஞ்சிபுரம்: வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு துறைகளின்கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூன் 25) மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய அவர், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாலுகா மற்றும் ஒன்றியத்தில் உள்ள நீர் நிலை, புறம்போக்கு நில வகைப்பாட்டில் இல்லாமல் நத்தம் புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு, கிராம நத்தம் உள்ளிட்ட நில வகைப்பாட்டில் மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படும் ஏழை எளிய மக்களை கணக்கெடுத்து அங்கு வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு பெறவேண்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படும்.
இதன்மூலம் அவ்வாறு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத்துறை மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் ஏழைகளின் வாழ்வில் மின் விளக்கு ஏற்றப்படும்" என்றார்.