செங்கல்பட்டு: திருப்போரூர் ஒன்றியத்திற்குள்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தா.மோ. அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றிக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், ”40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு வீடாகச் சென்று மருத்துவம் பார்த்து இரண்டு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை வழங்கிட இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மக்களைக் காப்பாற்றுவதற்காக முதன் முதலில் வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் மக்களைப் பாதுகாக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தது திமுக அரசு” என்றார்.
அதனைத் தொடர்ந்து புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியா ராஜ், மருத்துவர், செவிலியர், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி