காஞ்சிபுரம்: கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றித் தவிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, தமிழ்நாடு அரசு அரசி அட்டைதாரர்களுக்கு வழங்கும் கரோனா நிவாரண உதவித்தொகையின் முதல் தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 653 நியாய விலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 252 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
காவலன் கேட் அருகில் உள்ள நியாய விலைக் கடையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு கரோனா நிவாரண உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், "கரானா காலத்தில் ஏழை எளிய மக்கள் அவதிப் படக்கூடாது என்பதற்காக நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை நல்ல முறையில் பயன்படுத்தி குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்.