காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று (மே 17) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் புதியதாக அமைக்கப்படும் ஆக்ஸிஜன் படுக்கை பிரிவை பார்வையிட்ட அவர் ஆக்ஸிஜன் இருப்பு நிலவரங்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது,
“தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக கடந்த இரு நாள்களாக கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. விரைவில் தொற்று முழுமையாக குறையும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதில், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், ஆலைத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரையில் 77 லட்சம் கரோனா தடுப்பூசிகளில், 70 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து மூன்றரை கோடி தடுப்பூசிகள் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் 100 சதவீதம் தடுப்பூசி போடும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு 1.5 கோடி தடுப்பூசிக்கு தேவை இருக்கிறது. உலகளாவிய ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2 மாதத்தில் தடுப்பூசிகள் தமிழ்நாடு வந்துவிடும்” எனத் தெரிவித்தார்.
மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மேலும், பேசிய அவர், “இரண்டு நாள்களில் தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர், 2ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்களுக்குப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் கட்டடத்தில் இன்னும் ஓரிரு நாள்களில் ஆக்ஸிஜன் உதவியுடன் புதிதாக 100 படுக்கைகள் தயாராகி பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
இதையும் படிங்க: திமுக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளேன்:அதிமுக முன்னாள் அமைச்சர்