காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் கோயில் ஒன்றை ஆக்கிரமித்து டயர் கம்பெனி நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதனையடுத்து நேற்று (ஏப்.10) அக்கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியாக உள்ள, லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த கோயில் ஒன்று உள்ளது.
இங்கு திருமணமாகாத இருவரின் ஜீவசமாதிகள் உள்ளன. வருவாய்த்துறையினரின் ஏடுகளில் இது, கல்மடம் எனப் பதிவாகி இருக்கிறது. இக்கோயில் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன.
இக்கோயிலானது தனிப்பட்ட நபருக்குரியதா அல்லது லிங்காயச் சமுதாயத்தினருக்கு சொந்தமானதா என அவர்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து முடிவு செய்யப்படும். நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையும் அறநிலையத்துறை சட்டப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும்.
இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 129 ஏக்கர் நிலம் தன்வசப்படுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயில் குறித்து மகிழ்ச்சியான தகவல் வரும்" என்றார்.
இதையும் படிங்க:தமிழ் வாழ்கிறதா...கொல்லப்படுகிறதா... இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கம்!