சிறுவனுக்கு டீ கப் பயன்படுத்திய விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக கூறி இணையதளத்தில் பரவும் வீடியோ ஒன்றில், டீ கப் ஒன்றை ஆக்சிஜன் மாஸ்க்காக பயன்படுத்தி சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்பொது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தற்போது அந்த வீடியோ எடுக்கப்பட்ட தேதி தெரியாத நிலையில், இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாமல் பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவன் ஒருவனுக்குக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக மாணவனின் தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கே மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு செயற்கை ஆக்சிஜன் வழங்க அறிவுறுத்தி உள்ளனர். மாணவனின் மூச்சுக் குழல் வழியாக ஆக்சிஜன் செலுத்துவதற்குண்டான மாஸ்க் மருத்துவமனையில் கையிருப்பில் இல்லாத காரணத்தால் டீ கடையில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கப்புகளை வாங்கி வந்து அதன் உதவியுடன் ஆக்சிஜனை மாணவனின் மூக்கு வழியாகச் செலுத்தியுள்ளனர்.
இப்படி வித்தியாசமாக ஆக்சிஜன் செலுத்தும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை கூறும் நிலையில் அடிப்படை சுகாதார கருவிகளில் பற்றாக்குறை இருப்பதை இச்சம்பவம் காட்டுவதாக" குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த மாதம் 27 ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிறுவனின் தந்தை, ஆக்சிஜன் முகக்கவசம் வர தாமதமாகும் என்ற காரணத்தால் தாமாகவே முன்வந்து பிளாஸ்டிக் கப்பை வாங்கி கொடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் சிறுவனுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது இது போன்று பயன்படுத்தியதாகவும், மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் மாஸ்குகளை சுகாதாரக் குறைவாக சிறுவனின் தந்தை கருதியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்" என அமைச்சர் கூறினார்.
அதே நேரத்தில் சிறுவனின் தந்தை தான் சிகிச்சையில் எந்த குறைபாட்டையும் உணரவில்லை எனவும், யார் மீதும் புகார் அளிக்கப் போவதில்லை எனவும் கூறிவிட்டார். எனினும் இந்த சிகிச்சை குறித்து மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகாதது என்பதால் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருப்பு முருகானந்தம் மீதான வழக்கு தள்ளுபடி - மாமன்னன் படத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி!