காஞ்சிபுரம்அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 118 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளுடன் மேன்மைமிகு சிகிச்சை மையம் 500 படுக்கை வசதிகளுடன் இரண்டு அடுக்கு மாடி வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கூடுதலாக 250 படுக்கைகளுடன் மேலும் இரண்டு அடுக்கு மாடி என 4 அடுக்கு மாடிகளுடன்,750 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் இரண்டு அடுக்கு மருத்துவமனை கட்டடப்பணிகள் வேகமாக நடைபெற்று முடிந்து வரும் நிலையில், இப்பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில் இந்த ஐந்து ஆண்டுகளில் கூடுமானவரை ஏறத்தாழ தரைப்பாலங்கள் இல்லாத வகையில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவினர் ஆறரை லட்சம் கோடி கடனை விட்டுச்சென்றுள்ள நிலையிலும், ஆண்டிற்கு 48 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டவேண்டிய சூழ்நிலையிலும், மோசமான, கடினமான, கையில் பணம் இல்லாத நிலையில் இருக்கிற பொழுது கூட, ஒரு சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர், அதற்கு அவருடைய அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் தான் காரணம், ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன்னாலேயே 50 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.