சென்னை: சாலைகள் பழுதடைந்து பராமரிக்காமல் இருப்பதால் மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள சுங்கச்சாவடியில் 2 வாரத்துக்கு 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நீதிபதியின் கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு இன்று (டிச. 9) விசாரித்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் தேசிய தரத்தில் இல்லை.
சாலைகள் தரமாக இல்லாததால்தான், கனமழையில் நொளம்பூர் மழை நீர் கால்வாயில் விழுந்து இறந்துள்ளனர். இறந்த தாய் மற்றும் மகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து பதிலலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலை பல நாள்களாக ஏன் சரி செய்யவில்லை? சாலைகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 520 விபத்துக்கள் நடைபெறுகிறது. சாலை விபத்து வழக்குகளில் இனி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையையும் சேர்க்க வேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தரப்பில், 10 நாள்களில் பழுதான சாலைகள் பழுது பார்க்கபடும் எனஉறுதி அளித்தனர். இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க:சுப்ரமணிய சாமி மீதான அவதூறு வழக்கு ரத்து! - அரசுக்கு நீதிபதி எச்சரிக்கை!