காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் ஆறு கிராம சபைக் கூட்டங்களை நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று(அக். 02) ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எச்சூர் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் குமுதா டோம்னிக் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.
இந்த கிராம சபைக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி எனப்பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம ஊராட்சியிலுள்ள பழுதடைந்த பள்ளிக்கூட சமையல் அறை கட்டடத்திற்கு புதிய கட்டடம், யமஹா தொழிற்சாலைக்கு செல்ல புதிய சாலை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர், 8ஆம் வகுப்பு வரையிலுள்ள பள்ளியை 12ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும் என அக்கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. T.R.பாலு கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.