காஞ்சிபுரம்:தமிழ்நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுலா பயணமாக வந்துள்ள மொரீஷியஸ் குடியரசு தலைவர் பிரித்விராஜ் சிங் ரூபன், மூன்றாவது நாளான நேற்று (நவ.14) கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவரை வருவாய் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் திருக்கோயில் வரலாறு மற்றும் தாயார் சன்னதி, மூலவர் வரதராஜ பெருமாள் ஆகிய சன்னதிகளில் அவர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தோஷம் நீக்கும் தங்க பள்ளியை வழிபட்டு கோயில் திருவிழா மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு இட்லி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றான காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிந்த அவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடராஜ சாஸ்திரி, கார்த்தி, மணியம் உள்ளிட்டோர் மேள தாளங்கள் முழங்க இரட்டைக் குடைகளுடன் வரவேற்று, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு பிரசாதங்களை வழங்கினர்.