காஞ்சிபுரம்:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற வாசகத்தை முன்னிறுத்தி, காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இன்று அம்மாவட்டத்தின் காந்தி ரோடுப் பகுதியிலுள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழ்நாட்டை சீரமைப்போம் என்பதில் பலவற்றை சீரமைக்க வேண்டும். அதில் பொருளாதார புரட்சியும் உள்ளடங்கும். அதனால் ஏழு அம்ச திட்டங்களை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவிக்கிறோம்.
மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசு சேவைகள் அனைத்தும் அவர்களுக்கு செய்யும் தானமாக இல்லாமல் மக்களின் உரிமையாக இருக்க வேண்டும்.
1.சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்:
மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல், அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
2. மின்னணு இல்லங்களாக மாற்றுதல்:
குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும், தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்திலும் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
3.நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்:
தமிழ்நாடு மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் இந்த நவீன கிராமங்கள் அமையும்.
4.தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்துதல்:
பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.