காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழ் படப்பையைச் சேர்ந்தவர் முரளி (45). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 1ஆம் தேதியன்று இரவு படப்பை பஜாரில் மளிகைப்பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் கழன்று ஓடி வந்த கனரக லாரியின் பின்பக்க டயர் ஒன்று எதிர்பாராத விதமாக, முரளியின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு, நிலைகுலைந்து சாலையில் கீழே விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நான்கு தினங்களாக தீவிர சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.