நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு தொடங்கலாம் என்று எண்ணியபோது, அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மேலும் மருத்துவர்கள், ரஜினிகாந்திடம் ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினர். அதனையடுத்து அவர், தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தும், செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
செளந்தர்யா ரஜினிகாந்த் பிரார்த்தனை இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று(ஜன.28) இரவு சிறப்பு தரிசனம் செய்தார். இதில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருக்கும் புது கட்சி வெற்றி அடைய வேண்டுமென சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங்கல்பம் செய்ததாக கூறப்படுகிறது .
இன்னும் ஒரு சில நாட்களில் லதா ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உடல் நலக்குறைவினால் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்க முடியாத இச்சூழலில் அவரது மனைவி புதியதாக கட்சி தொடங்கி ரஜினிகாந்த் வழிகாட்டுதலில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்த வலியுறுத்தல்!