காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில் கீழம்பி ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தி அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்து பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாகத் தூர்வாரி ஏரியில் இருக்கும் வண்டல் மண்களைக் கொண்டு ஏரியினைப் பலப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் லோடு வரையில் ஏரியிலிருந்து மணல் எடுத்ததால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டும், ஏரியின் மதகுகள் வழியாக ஏரியின் நீர்செல்ல முடியாத அளவிற்குப் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அவ்வழக்கானது நடைபெற்றுவருகிறது.
ஆட்சியரிடம் விவசாயிகள் மனு இந்நிலையில், மீண்டும் கீழம்பி ஏரியில் மிகை மணலை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து டெண்டர் விடப்பட்டு அப்பணியானது ஜனவரி 22 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதைத் தடுக்கக்கோரி கீழம்பி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் இன்று (பிப். 2) மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், நாளொன்றுக்கு சுமார் 80 லோடுகள் மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் 850 லோடுகள் வரை ஏரியிலிருந்து மணல் எடுத்து லாரிகள் மூலம் 2 யூனிட்டிற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்கும், 4 யூனிட்டிற்கு 5 ஆயிரம் என அரசு விதிமுறைகளை மீறி அதிக கட்டணத்தில் மணல் விற்கப்படுகிறது.
சுமார் 400 ஏக்கர் ஏரி பாசனம் பாதிப்படைவதாகவும், நிலத்தடி நீர் மட்டும் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள், எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், கீழம்பி ஏரியில் விதிமுறைகளுக்கு முரணாக அதிக அளவில் லாரிகள் மூலம் மண் எடுப்பதைத் தடுத்திட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.