காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பெருமாள் வழிபாடு செய்வதில் வடகலை, தென்கலை என பிரிவினரிடையே அடிக்கடி சண்டை எழுவது வாடிக்கையான ஒன்றாகும். வைகாசி விசாகம், பிரம்மோற்சவம் ஆகிய தினங்களின் போது சுவாமி முக்கிய வீதிகளில் வலம் வருகையில், முன்னும் பின்னும் வடகலை, தென்கலை அர்ச்சகர்கள் வேத மந்திரங்களையும் பாசுரங்களையும் பாடி செல்வார்கள்.
அப்போது இரு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகலை, தென்கலை பிரிவினர் இதுபோன்று அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது பலமுறை நடந்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளது. அதன்படி உற்சவம், சாற்றும் முறை தொடர்பாக நடைமுறைக்கு விரோதம் இல்லாத வகையிலும், பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள நடைமுறைக்கு மாறாக, நடைமுறையில் இல்லாத புதிய விஷயங்களை புகுத்தாமல் இருப்பது கோயில் நிர்வாகத்தின் கடமை.
எனவே எதிர்வரும் உற்சவங்களில் தகுந்த மாற்றங்கள் செய்யும் வரையோ அல்லது கோயில் நிர்வாகத்திடமிருந்து மறு உத்தரவு வரும் வரையோ, பழைய நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த நடைமுறையை மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை உதவி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகலையா... தென்கலையா... ஐயங்கார்களுக்கிடையே தொடரும் சிக்கல்! பக்தர்கள் கவலை