காஞ்சிபுரம்:தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் மாமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற, அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் இடையே போட்டாபோட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வேதாசலம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர், 44ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குச் சுயேச்சையாகத் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அப்பகுதியைச் சேர்ந்த துடிப்புமிக்க இளைஞர்களில் ஒருவரான சிவசண்முகம் போட்டியிடுவதால் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் மத்தியில் சிவசண்முகத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகளைப் போல ஏராளமான ஆதரவாளர்களைத் திரட்டி, வாகனங்கள் வைத்தும், பேண்டு வாத்தியம் வைத்தும் ஊர்வலமாகப் படைச் சூழ சென்று உடன் வருபவர்களுக்குத் தினந்தோறும் சில பல லட்சங்களைச் செலவழித்து , பிரியாணி போட்டு பந்தாக்காட்டி வாக்கு சேகரிப்பதைத் தவிர்த்துள்ளார்.