காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தெருநாய்களால் தொல்லை காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நோயாளிகளைப் பார்க்க வரும் உற்றார், உறவினர், நோயாளிகளுடன் தங்கி இருப்போர் என அதிகளவில் நடமாட்டம் உள்ள பகுதி இது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்கள் அலைந்து திரிந்து வருகின்றன. குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவு, போதை மறுவாழ்வுப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு போன்ற இடங்களில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. உச்சகட்டமாக நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு அருகிலேயே எந்த வித தங்கு தடையும் இல்லாமல் பல நாய்கள் உலா வந்து காண்போரைக் கலங்க வைக்கின்றன.
செவிலியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த நாய் கூட்டம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் செய்த உடன், பிறந்த பச்சிளம் குழந்தைகளின் செவித் திறன் கண்டறிய, அங்கிருந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பரிசோதனைப் பிரிவுக்கு செல்வது வழக்கம்.
அப்படிச் செல்லும்போது பச்சிளம் குழந்தைகளின் வாசனையை அறிந்து நாய்கள் பின் தொடர்ந்து வருவது பயங்கர அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. அதேபோல் கண் பார்வை சிகிச்சை பெற்றவர்கள் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு வரும்போது அவர்களை நாய்கள் துரத்துவது சர்வ சாதாரணம் என்கின்றனர்.
மேலும், பிரேத பரிசோதனைக் கூடம் அருகே குப்பைக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால் அங்கே அவற்றை உண்பதற்காக நாய்கள் படையெடுப்பதோடு, கழிவுகளைக் கவ்விக் கொண்டு சென்று மருத்தவமனையின் பல இடங்களில் அமர்ந்து கொண்டு உண்ண முற்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போடும் போது அந்தப் பகுதி வழியே செல்கின்ற மருத்துவர்களும், செவிலியர்களும், நோயாளிகளும் பயந்து ஓட்டம் பிடிகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டு வாயிலிருந்து உமிழ் நீர், உடம்பில் இருந்து ரத்தம் போன்றவை வெளியேறி காணப்படுகின்றது. இது பார்ப்போருக்கு அச்சத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடமும் , மாநகராட்சியிலும் பலமுறை புகார் அளித்தும் மருத்துவமனை நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என பலரும் புலம்புகின்றனர். இப்படி கண்டுகொள்ளாமல் விடப்படுகின்ற நாய்கள் மூலம் ரேபிஸ் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே ஏதும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர். அதேபோல் நாய்களைப் பிடிப்பதற்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி சரியாக செலவழிக்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அடிதடியில் இறங்கிய அர்ச்சகர்கள்.. மீண்டும் வெடித்த வடகலை-தென்கலை விவகாரம்!