மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் நுழைவுவாயிலில் இன்று (மார்ச் 5) அதிகாலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோவில் கொண்டு வந்த 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். அதேபோல், காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் வட்டாட்சியர் ரமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 4 லட்சத்து 400 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, வட்டாட்சியர் அகிலா தேவி தலைமையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர்
மேற்கொண்ட சோதனையில், கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரினை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 3 லட்சத்து 77 ஆயிரத்து நூறு ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர்.