காஞ்சிபுரம்:வேலையாட்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணமாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ள விவசாயிகள், நிலத்தை உழுவதற்கு மாடுகளை மாற்றிவிட்டு டிராக்டர் மூலமும், தண்ணீர் பாய்ச்சுவதற்கு சொட்டு நீர் பாசனமும், நாற்று நடுவதற்கும், அறுவடை செய்வதற்கும் வேலையாட்களுக்குப் பதிலாக இயந்திரங்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு மட்டும் வேலையாட்களை வைத்து மோட்டார் ஸ்பிரேயர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை உழுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதற்கும், நாற்று நடுவதற்கும், கதிர் அறுப்பதற்கும், நவீன தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு வரும் விவசாயிகள், தற்பொழுது மேலை நாடுகளுக்கு இணையாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க ட்ரோன் இயந்திரங்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தில் அதிகம் நெல் பயிர் செய்யும் விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க வேலையாட்கள் மூலம் மோட்டார் ஸ்பிரேயர் வைத்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வந்த நிலையில், இதற்கு அதிக நேரமும், அதிக செலவும் பிடித்ததால், தற்பொழுது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நவீன உத்திகள் மூலம் ட்ரோன்களைப் பயன்படுத்தி குறுகிய நேரத்தில் வேலையாட்கள் யாரும் இன்றி காலை, மாலை வேளைகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அதன்படி இந்திய உழவர் உரக்கூட்டு நிறுவனம் (இப்கோ) விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியாக உலகிலேயே முதல் நேனோ யூரியாவை இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை தமிழ்நாட்டில் முதன்முறையாக தற்போது இந்த இப்கோவின் நேனோ யூரியா மருந்தினை, ட்ரோன் மூலம் நேரடியாக, விவசாய நிலத்திற்கு தெளிக்கும் முறையை காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.