காஞ்சிபுரம் :பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 51 வார்டுகளுடன் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்கென காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியிலுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 367 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15ஆயிரத்து 72 பெண் வாக்காளர்களும், 29 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 468 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
மேலும் இந்த தேர்தலுக்காக மாநகராட்சி ஆணையர் நாராயணனன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் என தேர்தல் அலுவலர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
51 வார்டுகளில் போட்டியிட நேற்றை தினம் முதல் வேட்பு மனு தாக்கல் பணிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது.
அதையொட்டி நேற்றைய தினம் மட்டும் 96 நபர்கள் வேட்புமனுவை பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் இதுவரை அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என சுமார் 10 நபர்கள் வேட்பு மனுவை பெற்றுச் சென்றுள்ளனர்.