தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அத்தியாவசியத் தேவையின்றி, மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிகிச்சைக்குப் பின், 9 பேர் வீடு திரும்பியுள்ளனர். குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேர் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் கரோனா பரவுதலைத் தடுக்க அடுத்த கட்ட மருத்துவ, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலக குழுவினர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.