காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையானதில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் முன்னிலையில் இன்று இரு உண்டியல்கள் திறக்கப்பட்டது.
அதையொட்டி காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோரின் மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரூ.45 லட்சத்து 39ஆயிரத்து 560 ரூபாய் ரொக்கமும், 284 கிராம் தங்கமும், 600 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது. இந்நிகழ்வின் போது காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஸ்ரீகாரியம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, காஞ்சி சங்கர மடம் ஸ்ரீகாரியம் விஸ்வநாதன், இந்து சமய அறநிலையத் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கரோனா ஊரடங்கிற்கு பிறகு; குறிப்பாக சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.